அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 17 Aug 2021 9:44 PM IST (Updated: 17 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அன்னூர்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம்  கிராம நிர்வாக அதிகாரியாக கலைச்செல்வியும், உதவியாளராக ஏ.டி.காலனியை சேர்ந்த  முத்துசாமி (வயது 56) என்பவரும் பணியாற்றி வந்தனர். 
கடந்த 6-ந் தேதி அன்னூரை அடுத்த கோபிராசிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி (38) என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். 


இந்த நிலையில் உதவியாளர் முத்துசாமியை, கோபால்சாமி சாதி ரீதியாக திட்டியதாகவும், மேலும் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட வைத்ததாகவும் வீடியோ வெளியாகி வைரலானது. இதன் அடிப்படையில் கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை கையால் கன்னத்தில் ஓங்கி தாக்குவதும், அதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுவதும் பதிவாகி இருந்தது.

மேலும் அவர்கள், கலெக்டர் அமைத்த விசாரணை குழுவுக்கு உண்மையை மறைத்து தவறான தகவலை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். 
மேலும் அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கமும் செய்யப் பட்டனர். அதுபோன்று கிராம உதவியாளர் முத்துசாமி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்பினர் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆர்ப்பாட்டத்துக்கு  தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார் பற்றது) பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கி னார். இதில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்ல முத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி, விவசாயிகள் சங்க (சாதி சார்பற்றது) ஏ.கே.சண் முகம், விவசாயிகள் நல பாதுகாப்பு இயக்க ஈசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தில், விவசாயி கோபால்சாமி மீது தாக்குதல் நடத்தி போலீசாருக்கு பொய்யான தகவல்களும், வாக்குமூலங்களும் கொடுத்து அரசு நிர்வாகத்தை ஏமாற்றி கொலை முயற்சி, வன்கொடுமை போன்ற 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். கோபால்சாமி மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். 


வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி கிராம உதவியாளர் முத்துசாமி களங்கம் ஏற்படுத்தி உள்ளார். ஆகவே வன்கொடுமை தடுப்பு சட்டம் அரசு பதவிகள் உள்ளவர்களுக்கு பொருந்தாது என அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயி கோபால் சாமிக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியிறுத்தப்பட்டன.

Next Story