தாராபுரம் வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 27 பேரை போலீசார் கைது


தாராபுரம் வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 27 பேரை போலீசார் கைது
x
தினத்தந்தி 17 Aug 2021 10:43 PM IST (Updated: 17 Aug 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 27 பேரை போலீசார் கைது

தாராபுரம், 
தாராபுரம் வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருப்பு கொடி போராட்டம்
தமிழக  பா.ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மக்கள் ஆசி வேண்டி பிரசார வாகனம் மூலம் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். 
அதன்படி நேற்று மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் தாராபுரம் வந்தனர். தாராபுரம் வரும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று ஆதித்தமிழர் பேரவையினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி எல்.முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாராபுரம் பஸ் நிலையம் முன்பு கருப்பு கொடியுடன் ஆதித்தமிழா் பேரவையினர் திரண்டு நின்றனா்.
அதனை பாா்த்த பா.ஜனதா கட்சியை சோ்ந்த பட்டியல் அணி நிா்வாகிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே பா.ஜனதா பட்டியல் அணி நிர்வாகிகள் தாராபுரம் பஸ் நிலையம் சென்று அங்கு கருப்பு கொடியுடன் நின்று கொண்டிருந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
27 பேர் கைது
அதனை அறிந்த போலீசாா் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து வந்து பா.ஜனதாவினரை சமாதானம் செய்தனா். அதைத்தொடா்ந்து கருப்பு கொடி காட்ட முயன்ற ஆதித்தமிழா் பேரவையை சோ்ந்த 4 பெண்கள் உள்பட 27 பேரை போலீசாா் கைது செய்தனர்.
பின்னர் கைதான அவரையும் அங்குள்ள  தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதற்கிடையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கைதானவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு சென்று ஆதித்தமிழர் பேரவையினருக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மாலையில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story