ஆழியாறு அணை 115 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆழியாறு அணை 115 அடியை எட்டியது. இதையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆழியாறு அணை 115 அடியை எட்டியது. இதையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது ஆகும். அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி அணை 100 அடியை எட்டியது.
இதை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி 110 அடியை எட்டியதை தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை 115 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தண்டோரோ மூலம் அறிவிப்பு
அணை வேகமாக நிரம்பி வருவதால் எந்த நேரத்திலும் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கூடும். எனவே ஆனைமலை தாலுகா கோட்டூர், மயிலாடு துறை, ஆழியாறில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது.
பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் தண்டோரோ மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
115 அடியை எட்டியது
ஆழியாறு அணையில் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். தற்போது அணையில் 3 ஆயிரத்து 514 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 350 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 666 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story