அரசு நிலத்தில் 30 மரங்கள் வெட்டி சாய்ப்பு


அரசு நிலத்தில் 30 மரங்கள் வெட்டி சாய்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 12:44 AM IST (Updated: 18 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் அரசு நிலத்தில் 30 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம், ஆக.18-
குமாரபாளையத்தில் அரசு நிலத்தில் 30 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மரங்கள் வெட்டி சாய்ப்பு
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் இருந்து பூலக்காடு வழியாக எம்.ஜி.ஆர். நகர் வரை செல்லும் பாதையை ஒட்டி பொதுப்பணித்துறை கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த பாதையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஏராளமான மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி சோலைவனமாக காட்சி அளித்தது.
இதற்கிடையே அந்த பகுதியில் நின்ற 30-க்கும் மேற்பட்ட மரங்கள் எந்திரம் கொண்டு வெட்டி சாய்க்கப்பட்டன. மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அதிகாலையில் இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
இந்த நிலையில் குமாரபாளையம் பொதுப்பணித்துறை பொறியாளர் முருகேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் கவிதா கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மரங்கள் சோலைவனமாக காட்சி அளித்தால் மது பிரியர்கள் அங்கு அமர்ந்து மது அருந்துவார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள மது பாருக்கு மது பிரியர்கள் செல்வது இல்லை என கூறப்படுகிறது. அந்த மரங்களை வெட்டினால்தான் அங்கு யாரும் மது அருந்த மாட்டார்கள் என, மதுபார் தொடர்புடைய நபர்கள் அந்த மரங்களை வெட்டி சாய்த்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Next Story