தர்ணாவில் மயங்கி விழுந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கலெக்டர் உதவி


தர்ணாவில் மயங்கி விழுந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கலெக்டர் உதவி
x
தினத்தந்தி 18 Aug 2021 1:00 AM IST (Updated: 18 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

இடுகாட்டிற்கு பாதை கேட்டு தர்ணாவில் மயங்கி விழுந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்.

கரூர்,
மண்மங்கலம் தாலுகா, நெரூர் தென்பாகம் வேடிச்சிபாளையத்தில் இடுகாட்டிற்கு பாதைகேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூலி தொழிலாளியான வேலுச்சாமி (வயது 41) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பல்வேறு உதவிகளை நேரில் சென்று வழங்கினார். உயிரிழந்த வேலுச்சாமியின் மனைவி மணிமேகலையிடம் ஈமச்சடங்கு நிதி உதவி ரூ.22,500-க்கான உத்தரவையும், மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.1 லட்சம் வழங்குவதற்கான உத்தரவையும், விதவை உதவித்தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான உத்தரவையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறும் வகையில் ஆதரவற்றோர் விதவை சான்றிதழையும் வழங்கினார்.  கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடும் போது முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் வேலுச்சாமியின் மூத்த மகன் சந்தோஷ் (19), 10-ம் வகுப்பு படித்துள்ளார். அவர் தொடர்ந்து பாலிடெக்னிக் படிக்கவும், தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறவும் உதவி செய்யப்படும் எனவும், வேலுச்சாமியின் 2-வது மகன் சாரதி (13) கல்வியை தொடர்ந்து பெற தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தங்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். முதல்-அமைச்சர் மூலமும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரின் மூலமும் பரிந்துரை செய்து மேலும் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் ஆறுதல் கூறினார்.


Next Story