வறண்டு வரும் நீர் ஆதாரங்கள்... தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்
விருதுநகருக்கான குடிநீர் ஆதாரம் குறைந்ததால் நகராட்சி நிர்வாகம் நீர் ஆதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகருக்கான குடிநீர் ஆதாரம் குறைந்ததால் நகராட்சி நிர்வாகம் நீர் ஆதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் ஆனைக்குட்டம் அணைப்பகுதி, காரிசேரி கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி, சுக்ரவார்பட்டி கோடைகால குடிநீர்தேக்கம் ஆகிய நிலத்தடி நீர் ஆதாரங்களை நம்பியிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபின் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொடக்கத்தில் தாமிரபணிகூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 25 முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று குடிநீர்வடிகால் வாரியத்தால் உறுதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மின்தடை, குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளால் விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு பெரும்பாலான நாட்களில் குறைவாகவே உள்ளது. அதிலும் தற்போது தினசரி 17 லட்சம் லிட்டர் தண்ணீரை கிடைத்து வருகிறது. மேலும் ஆனைக்குட்டம் அணை பகுதியில் உள்ள 12 உறை கிணறுகளிலிருந்து வறட்சி காரணமாக தினசரி 6 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒண்டிபுலி கல்குவாரியில் இருந்து தினசரி 8 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும் நிலை உள்ளது. தினசரி அதிகபட்சமாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க கூடிய நிலையில் விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. விருதுநகரை பொருத்தமட்டில் தினசரி 60 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தால் நகர் முழுவதும் பிரச்சினையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். ஆனால் தற்போது குடிநீர் அளவு வெகுவாக குறைந்துள்ள நிலையில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டபோது மாதம் இருமுறை தற்போது விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்கள் 14 முதல் 15 நாட்களாக அதிகரித்து விட்டது. அதாவது தற்போதைய நிலையில் மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை இல்லை
ஆனால் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நகருக்கும் கிடைக்கும் குடிநீர் அளவு அதிகரிக்க நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது தாமிரபரணியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் பாதையை ஆய்வு செய்வதோடு வல்லநாட்டில் குடிநீர் உறிஞ்சப்படும் இடத்திற்கு நேரில் சென்று தேவையான நடவடிக்கை மேற்கொண்டால் ஓரளவு குடிநீர் அதிகமாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இந்தநிலையில் ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் தற்போது உள்ள 12 உறை கிணறுகளிலும் நீர் ஆதாரம் குறைந்து விட்ட நிலையில் புதிய உறை கிணறுகள் தோண்டவும், இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும் நகரில் குடிநீர் மேம்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நகரில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று நிலத்தடி நீராதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் கூடுதல் குடிநீர் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட 10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story