அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2021 1:28 AM IST (Updated: 18 Aug 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே யூனியன் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே யூனியன் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

அதிகாரி தற்கொலை

தென்காசி அருகே உள்ள குற்றாலம் நன்னகரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உஷா சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் முக்கூடலில் வாடகை வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் யூனியன் அலுவலத்திற்கு பணிக்கு சென்ற ராதாகிருஷ்ணன் அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு முக்கூடல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

போராட்டம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ராதாகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு நின்ற உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டம் நடத்தினர்.

ராதாகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்தனர். மேலும் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராதாகிருஷ்ணன் உடலை குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்.

Next Story