கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு காசநோய் பரிசோதனை; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு காசநோய் பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காசநோய் பரிசோதனை
கர்நாடகத்தில் இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு நோய் தாக்குதலின்போது நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. காசநோயும் நுரையீரலில் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதனால் கொரோனவால் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை இயக்கம் கடந்த 16-ந் தேதி தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனை வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
75 லட்சம் பேர்
கர்நாடகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வரை காசநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அவற்றை குணப்படுத்துவது எளிது. 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதில் 88 சதவீதம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 3.9 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக காசநோய் பரிசோதனை பணி சற்று பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நட்டை உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துள்ளார். இந்த இலக்கை நோக்கி எங்கள் அரசு பயணித்து வருகிறது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு
அதனால் "ஆரோக்கிய நந்தன" என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி கர்நாடகத்தில் உள்ள 1½ கோடி குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனையில் அவா்களின் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் பிற நோய் பாதிப்புகள் கண்டறியப்படும். இந்த திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படும். அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நான் டெல்லி சென்று சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து, கர்நாடகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன். தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்பு திட்டம் (சி.எஸ்.ஆர்.) நிதி மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுக்கு வழங்குமாறு தனியார் நிறுவனங்களை கேட்க இருக்கிறோம். மங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டமானது. கொரோனா நோய் குணப்படுத்தக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் மீண்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story