தலீபான்கள் ஆட்சி: கர்நாடகத்தில் படிக்கும் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் மிகுந்த கவலை


தலீபான்கள் ஆட்சி: கர்நாடகத்தில் படிக்கும் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் மிகுந்த கவலை
x
தினத்தந்தி 18 Aug 2021 1:46 AM IST (Updated: 18 Aug 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் உள்ள அந்நாட்டு மாணவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

மிகுந்த கவலை

  ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் தார்வாரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள். அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை நினைத்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

  இதுகுறித்து தனியார் கல்லூரியில் படிக்கும் ஹரூன் என்ற மாணவர் கூறுகையில், "எங்களின் குடும்பங்களை நினைத்து மிகுந்த கவலை அடைந்துள்ளோம். அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. நான் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இணையம் வழியாக பேசும்போது, அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறினர்" என்றார். பெயர் வெளியிட விரும்பாத மேலும் சில மாணவர்கள் கூறுகையில், "எங்களின் குடும்பத்தினரை நிலையை நினைத்தால் பயமாக உள்ளது. அடுத்து அவர்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்றார்.

நிலைமை மோசம்

  மாணவி ஒருவர் கூறும்போது, "அங்கு அமெரிக்கா ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சியால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மாறி வந்தது. அங்கு சமுதாயத்தை கட்டமைத்தனர். தற்போது மீண்டும் தலீபான்கள் ஆட்சியில் நிலைமை மோசம் அடையும். பெண்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுகு்கு கவலை அளிப்பதாக உள்ளது. வரும் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் இங்கு நன்றாக படிக்கிறோம். ஆனால் பணியாற்ற எங்களை அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.

  தார்வாரில் உள்ள ஆராய்ச்சி மாணவர் நசரத்துல்லா ககர் கூறும்போது, "எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் உண்மையிலேயே கவலை அடைந்துள்ளோம். குடும்பத்தினரிடம் பேசிய பிறகு சற்று ஆறுதல் அடைந்துள்ளோம். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 மாணவர்கள் தார்வாரில் படித்து வருகிறோம். இந்த தார்வார் விவசாய பல்கலைக்கழக நிர்வாகம் எங்களுடன் பேசி ஆறுதல் கூறியது" என்றார்.

Next Story