திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை


திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு: கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2021 1:56 AM IST (Updated: 18 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே, திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கால்வாயில் குதித்து கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிக்கமகளூரு:

குழந்தை இல்லை

  சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பரசுராம்புராவை சேர்ந்தவர் திப்பேசாமி (வயது 32) இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். ஆனால் குழந்தை இல்லை. பெயிண்டர் வேலை செய்து வந்த திப்பேசாமி, இரியூர் தாலுகா கூனிகெரே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வாரத்திற்கு ஒரு முறை வந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்று வந்த போது கூனிகெரே கிராமத்தில் வசித்து வந்த புஷ்பலதா (வயது 24) என்பவருடன், திப்பேசாமிக்கு பழக்கம் உண்டானது.

  இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்து உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்து உள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி புஷ்பலதாவுடன், திப்பேசாமி உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பலதாவின் பெற்றோரிடம் சென்று உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று திப்பேசாமி கேட்டு உள்ளார்.

திருமணம் நிச்சயம்

  ஆனால் திப்பேசாமிக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி அறிந்த புஷ்பலதாவின் பெற்றோர் தங்களது மகளை திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். மேலும் புஷ்பலதாவுக்கு, உறவுக்கார வாலிபருடன் திருமணமும் நிச்சயம் செய்து இருந்தனர்.

  இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி புஷ்பலதா வீட்டில் இருந்து மாயமானார். அதுபோல திப்பேசாமி மாயமாகி இருந்தார். இதனால் தனது மகளை, திப்பேசாமி கடத்தி சென்று விட்டதாக புஷ்பலதாவின் தந்தை இரியூர் புறநகர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்
பேரில் மாயமான புஷ்பலதா, திப்பேசாமியை போலீசார் தேடிவந்தனர்.

கால்வாயில் குதித்து தற்கொலை

  இந்த நிலையில் நேற்று காலை கூனிகெரே கிராமத்தில் உள்ள கால்வாயில் திப்பேசாமியும், புஷ்பலதாவும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி அறிந்த இரியூர் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் திப்பேசாமியுடன் சேர்ந்து புஷ்பலதாவும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து இரியூர் புறநகர் போலீசார் வழக்குப்
பதிவு செய்து உள்ளனர்.

Next Story