ஜவுளிக்கடையில் பணம்- வெள்ளி முலாம் பூசப்பட்ட விளக்குகள், சிலை திருட்டு
ஜவுளிக்கடையில் பணம்- வெள்ளி முலாம் பூசப்பட்ட விளக்குகள், சிலையை மர்ம நபர் திருடிச்சென்றார்.
மீன்சுருட்டி:
பணம்- விளக்குகள் திருட்டு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). இவர் மீன்சுருட்டி பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்னர் இரவு 9 மணி அளவில் ஜவுளிக்கடையை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை அவருடைய மகன் மணிகண்டன்(30) வழக்கம் போல் கடையை திறப்பதற்கு வந்தார். அப்போது கடை கதவின்(ஷட்டர்) பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையின் உள்ளே சென்று கல்லாவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மற்றும் கல்லா அருகில் இருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட 2 குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஒரு அடி உயர பிள்ளையார் சிலை ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
ஓட்டலிலும் கைவரிசை
இது குறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் ஒரு மர்ம நபர், கடை கதவின் பூட்டை தேங்காய் உரிக்கும் கம்பியால் உடைத்து, கடைக்குள் சென்று கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் குத்துவிளக்குகள், பிள்ளையார் சிலை ஆகியவற்றை திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
மேலும் ஜவுளிக்கடை அருகில் உத்திராபதி(50) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அவர் ஓட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று அவர் கடையை திறக்க வந்தபோது, கல்லாவில் தண்டல் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.500-ஐ மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டலையும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடை மற்றும் ஓட்டலில் திருட்டில் ஈடுபட்டது ஒரே நபராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.
Related Tags :
Next Story