ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை
ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
ஏரல், ஆக.19-
ஏரல் அருகே பழிக்குப்பழியாக பஞ்சாயத்து தலைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓட்டை உடைத்து வீட்டுக்குள் குதித்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பஞ்சாயத்து தலைவர்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஈசாக்கு. இவருடைய மகன் பொன்சீலன் (வயது 45). விவசாயியான இவர் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்தார். இவர் தற்போது தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வீரபாண்டி நகரில் வசித்து வந்தார்.
அ.தி.மு.க. பிரமுகரான இவர் அகரம் பஞ்சாயத்து தலைவராகவும், பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
பொன்சீலனுக்கு எஸ்தர் மெர்லின் என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
4 பேர் கும்பல்
அகரத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பொன்சீலன் அகரம் வந்து நேற்று காலை 10.45 மணிக்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் தவசிக்கனி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வந்தனர். இதை பார்த்ததும் திடுக்கிட்ட பொன்சீலன் வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
ஆனால், அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் வீட்டு முன்பும், மற்றொருவர் வீட்டின் பின்பக்கம் கதவு அருகிலும் நின்று கொண்டனர். மற்ற 2 பேர் வீட்டின் மேற்கூரையில் ஏறி ஓடுகளை உடைத்துக் கொண்டு உள்ளே குதித்தனர்.
சரமாரி வெட்டிக்கொலை
பின்னர் அங்கிருந்த பொன்சீலனை அவர்கள் சரமாரியாக வெட்டினர். அதன்பின்னர் கதவை திறந்தும் வெளியே நின்ற 2 பேருடன் சேர்ந்து வந்து அவரை மீண்டும் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பொன்சீலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் தப்பினர்
இதையடுத்து அந்த கும்பல் அந்த வீட்டின் அருகில் தயாராக நிறுத்தியிருந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் விரைந்து வந்து பொன்சீலன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பழிக்குப்பழியாக...
பொன்சீலன் கொலையில் துப்பு துலக்க தூத்துக்குடியில் இருந்து மோப்ப நாய் ‘ஜூனோ’ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இறந்த பொன்சீலன் கடந்த 2008-ம் ஆண்டு அகரம் பாலத்தில் மோகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன்பிறகு 2017-ம் ஆண்டு அகரத்தை சேர்ந்த லெனின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
மேலும் சமீபத்தில் நடந்த திருமண்டல தேர்தலில் பொன்சீலன் ெவற்றி பெற்றார். அந்த தேர்தலில் ெலனினின் உறவினர் தோல்வியடைந்தார்.
இந்தநிலையில்தான் பொன்சீலன் கொலை செய்யப்பட்டார். எனவே, லெனின் கொலைக்கு பழிக்குப்பழியாக பொன்சீலன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், வேறு காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 பேருக்கு வலைவீச்சு
பொன்சீலன் கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், கொலை தொடர்பாக லெனின் தம்பிகளான ஜெகன், ரூபன் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், சந்தேகப்படும்படியான 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரல் அருகே வீட்டின் மேற்கூரை ஓடுகளை உடைத்து புகுந்து, பழிக்குப்பழியாக பஞ்சாயத்து தலைவரை கும்பல் வெட்டிக்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story