அதிராம்பட்டினத்தில் நலிவடைந்து வரும் உப்பள தொழில் மீட்டெடுக்க அரசு உதவுமா?


அதிராம்பட்டினத்தில் நலிவடைந்து வரும் உப்பள தொழில் மீட்டெடுக்க அரசு உதவுமா?
x
தினத்தந்தி 18 Aug 2021 8:49 PM IST (Updated: 18 Aug 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் நலிவடைந்து வரும் உப்பள தொழிலை மீட்க அரசு உதவுமா? என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு காலத்தில் அமோகமாக நடைபெற்ற உப்பு உற்பத்தி தொழில் தற்போது நலிவடைந்து வருவதால் உப்பள தொழிலாளர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் கவலையடைய செய்துள்ளது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அதிராம்பட்டினம் பகுதியில் தீவிரமாக உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. இதனால் இப்பகுதியில் உற்பத்தியாகும் உப்பை ஏற்றுமதி செய்ய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அதிராம்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்து உருவாக்கப்பட்டது.

மேலும் உப்பை சேமித்து வைக்க அரசு மூலமாக சேமிப்புகிடங்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு உப்பு சேகரித்து வைக்கப்பட்டது. மேலும் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட உப்பளத்தொழிலாளர்கள் தங்குவதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. உப்பு உற்பத்தி தொழிலை நிர்வகிக்க அதிராம்பட்டினத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் அதிக வரவு செலவுடன் இயங்கிவந்தது.

தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உப்பளத்தொழில் நடைபெறுகிறது. அதுவும் பாரம்பரியமாக செய்துவரும் தொழிலை விட்டுவிட மனமில்லாமல் சிலர் இந்த தொழிலை கடமைக்காக செய்து வரும் நிலை தற்போது உள்ளது. இதற்கு காரணம் அதிக முதலீடு செய்து உப்பள பணிகளை தொடங்கி கடும் உழைப்புக்கு பின் உப்பு உற்பத்தியை எட்டும் போது மழை பெய்துவிடுகிறது.

இந்த நிலை கடந்த 5 வருடங்களாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. வெப்பசலனத்தின் காரணமாக கோடை மழை சில வருடங்களாகவே பெய்து வருகிறது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டமடைந்துவரும் நிலை உள்ளது. இதனால் உப்பளத்தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அமோகமாக நடைபெற்ற உப்பள தொழில் தற்போது நலிவடைந்து வருவது உப்பள தொழிலாளர்களை மட்டுமின்றி இப்பகுதி மக்களையும் கவலையடைய செய்துள்ளது. மீண்டும் உப்பளத்தொழில் புத்துயிர் பெற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல உப்பு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் உப்பள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story