தர்மபுரி மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 100 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்


தர்மபுரி மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 100 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Aug 2021 9:01 PM IST (Updated: 18 Aug 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 100 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

தர்மபுரி:
தர்மபுரியில் மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 100 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
அதிகாரிகள் சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டுகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக கலெக்டர் திவ்யதர்சினிக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், மீன்வளத்துறை ஆய்வாளர் அசினா பானு ஆகியோர் தர்மபுரி நகரில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள், மார்க்கெட்டுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்கள் தரமானதாக உள்ளதா? ரசாயன கலவை சேர்க்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் மீன்களை சோதனை நடத்தினர்.
மீன்கள் பறிமுதல்
அப்போது ஒரு சில கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தரமற்ற மீன் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒரு மீன் விற்பனை நிலையத்திற்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.
அரசின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் மீன் மார்க்கெட்டில் இதேபோன்று திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story