திருப்பூர் மாநகராட்சி எஸ்.ஆர்.நகர் பகுதியில் சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி எஸ்.ஆர்.நகர் பகுதியில் சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி எஸ்.ஆர்.நகர் பகுதியில் சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தெருவுக்கு மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாலைவசதி
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். 60 வார்டுகளை கொண்ட திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் மக்கள் தொகை 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது. மக்கள் நெருக்கம் மிகுந்த திருப்பூர் மாநகரில் சாலைவசதி போதுமான அளவில் இல்லை என்பதே நிதர்சன உண்மை.
அவ்வாறு சாலைகள் அமைக்கப்பட்ட பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் குடிநீர் குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை குழாய் பதிப்பு என்று பிரதான சாலைகள் முதல் வீதிகளில் உள்ள தெருக்கள் வரை சாலையை தோண்டி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை தாண்டியே சாலைகளில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த நிலையில் திருப்பூர் 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம், இடுவம்பாளையம், குளத்துப்புதூர், சின்னியகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை மற்றும் 4-வது குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் எஸ்.ஆர்.நகர் மற்றும் 60 அடி ரோடு ஆகிய பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
எஸ்.ஆர்.நகர் மற்றும் 60 அடி ரோடு சுற்றியும் 152 தெருக்கள் உள்ளன. இதில் 47 தெருக்களை கொண்ட எஸ்.ஆர்.நகர் பகுதியில் பாதியளவுக்கு மட்டுமே கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கும் பணி முழுமை பெறாத நிலையில் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் குடியிருக்கும் மக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் தினம் தினம் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எஸ்.ஆர்.நகர் 47-வது வீதி 6-வது குறுக்கு சந்திப்பு பகுதியில் உள்ள தெருவில் மட்டும் சாக்கடை கால்வாய் வசதி, பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கான்கிரீட் தளம் ஆகியவை துரிதமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள், இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அந்த வீதியில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்க காரணம் என்ன? என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.
கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்
இதுகுறித்து 60-வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், ஆண்டிப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவருமான ஆனந்தன் கூறும்போது, ‘ எஸ்.ஆர்.நகர், 60 அடி ரோடு ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் பணிகள் இதுவரை முழுமை பெறாமல் தாமதமாகி வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனத்தினர், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால் 47-வது தெரு, 6-வது குறுக்கு சந்தில் மட்டும் அனைத்து பணிகளையும் முடித்துக்கொடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் எதற்காக முக்கியத்துவம் கொடுத்து அங்கு பணிகளை முடிக்க வேண்டும். மற்ற பகுதிகளை ஏன் கிடப்பில் போட வேண்டும் என்று தெரியவில்லை. வேண்டியவர்கள் உள்ள பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சருக்கும், மாநகராட்சி ஆணையாளருக்கும் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை கால்வாய் பணிகளை முடித்து கான்கிரீட் தளம் அனைத்து பகுதிகளிலும் விரைவில் அமைத்துக்கொடுத்து பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story