ஆவூர் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


ஆவூர் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Aug 2021 11:08 PM IST (Updated: 18 Aug 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஆவூர் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவூர்:
5 பவுன் நகை-பணம் திருட்டு 
விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள கோட்டைகாரன்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 47). இவரது மனைவி லூசியாமேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தனது இளைய மகளை கல்லூரியில் கொண்டு விடுவதற்காக நேற்று காலை 9.30 மணியளவில் வேளாங்கண்ணி தனது மகளுடன் பஸ் ஏறுவதற்காக மலம்பட்டி சென்றார். அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அவர்களுடன் லூசியாமேரியும் சென்றார். பின்னர் அவர்களை பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு லூசியாமேரி வீட்டிற்கு திரும்பி வந்தார். 
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மண்டையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
15 பவுன் நகை திருட்டு 
ஆவூர் அருகே உள்ள மதயானைப்பட்டியை சேர்ந்தவர் ஜூலியன் (51), விவசாயி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஜான்பாஸ்கர், பால்ராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை ஜூலியன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். செல்வராணி 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார். அவர்களது மூத்த மகன் வேலைக்கு சென்றுவிட்டார். இளைய மகன் பால்ராஜ் திருச்சிக்கு சென்று விட்டு பகல் 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள் அறையில் இருந்த பீரோ கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே இவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை 
இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  மேலும் ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story