திட்டக்குடி அருகே பரபரப்பு அரசு பள்ளியில் திடீர் தீ மாணவர்களின் சான்றிதழ்கள் சாம்பலானது


திட்டக்குடி அருகே பரபரப்பு அரசு பள்ளியில் திடீர் தீ  மாணவர்களின் சான்றிதழ்கள் சாம்பலானது
x
தினத்தந்தி 18 Aug 2021 11:12 PM IST (Updated: 18 Aug 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே அரசு பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

திட்டக்குடி, 

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். பின்னர் மதியம் உணவு இடைவேளியின் போது பள்ளியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.

தீ பற்றி எரிந்தன

இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தலைமையாசிரியரின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டு,  அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

 இதுபற்றி அவர்கள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் வசந்தராஜன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சாம்பலான ஆவணங்கள்

இருப்பினும் அங்கிருந்த 3 பீரோக்களில் இருந்த  மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மேலும் 4 லேப்டாப், மேஜைகள், மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருந்த சீரூடைகள், புத்தகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. 

காரணம் என்ன?

 தீ விபத்தில் சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அதே நேரத்தில், திடீர் தீ விபத்து நேர்ந்ததும் சந்தேகமாக உள்ளது. எனவே இதற்கு உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக  ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதன் விசாரணை முடிவிலேயே தீ விபத்துக்கான மர்ம மூடிச்சுகள் அவிழ்ந்து உண்மை நிலை என்ன என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story