சிறப்பாசிரியர்கள் தர்ணா போராட்டம்
சிறப்பாசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு சிறப்பாசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், அவர்களது பெற்றோர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பாசிரியர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும் சம்பளத்தை முழுமையாக வழங்க வேணடும், சம்பளபாக்கியை வழங்க வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட சிலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் சமரசமடைய மறுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் சிறப்பாசிரியர்கள் 2 பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி அவர்களது பெயர்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் பாலியல் குற்றச்சாட்டையும் கூறினர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story