ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று எனது கிராம வளர்ச்சி திட்ட அறிக்கையை அரசு செயல்படுத்த வேண்டும் கறம்பக்குடி மாணவி பேட்டி
ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று எனது கிராம வளர்ச்சி திட்ட அறிக்கையை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கறம்பக்குடி மாணவி கவுரி கூறினார்.
கறம்பக்குடி:
மாணவி தயாரித்த அறிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கவுரி (வயது 16). பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு துறையில் பல்வேறு தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் முறையான விவரங்கள் கிடைக்கவில்லை. பல அரசு துறைகளில் எந்த புள்ளி விவரங்களும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைதொடர்ந்து அவரது பூர்வீக ஊரான தஞ்சாவூர் மாவட்டம், சின்ன அம்மங்குடி கிராமம் குறித்து தகவல்களை திரட்டினார். அதற்கான புள்ளிவிவர பதிவேட்டையும் உருவாக்கினார். தொடர்ந்து கிராமப்புற வளர்ச்சி குறித்து திட்ட அறிக்கை தயாரித்த மாணவி கவுரி, கிராம கலெக்டர் பதவியை உருவாக்கி வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவர் தயாரித்த ஆய்வறிக்கை குடியரசு தலைவர், பிரதமர், தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை.
தமிழக அரசுக்கு உத்தரவு
இதைதொடர்ந்து கவுரியின் தந்தை லெட்சுமணன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாணவி கவுரியிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தி கிராம மேம்பாட்டு அறிக்கை குறித்து பாராட்டு தெரிவித்தனர். வழக்கு இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாணவி கவுரியின் திட்ட அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி
இதுகுறித்து திட்ட அறிக்கை தயாரித்த கறம்பக்குடி மாணவி கவுரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- எனது திட்ட அறிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல திட்டங்களை செயல்படுத்த புள்ளிவிவர பதிவேடு கட்டாயம். தமிழக நிதியமைச்சர் புள்ளி விவரங்கள் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இதனால் குடும்ப தலைவிகளுக்கும் 1,000 வழங்கும் திட்டம் தாமதம் ஆகி உள்ளது. கிராம புற புள்ளிவிவர பதிவேடு தேச வளர்ச்சிக்கு நிச்சயம் கைகொடுக்கும். பல அரசு துறை அதிகாரிகள் உதாசீனபடுத்திய நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இந்த தீர்ப்பை ஏற்று எனது ஆய்வு திட்ட அறிக்கையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து மாணவி கவுரிக்கு சமூக ஆர்வலர்கள், சக மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story