7 குழந்தைகளை வேலைக்கு அழைத்து சென்ற தம்பதி உள்பட 4 பேர் சிக்கினர்
ஜவ்வாதுமலையில் பெற்றோர்களுக்கு பண ஆசை காட்டி 7 குழந்தைகளை வெளியூரில் வேலைக்காக அழைத்துச்சென்ற தம்பதி உள்பட 4 இடைத்தரகர்களை ஜமுனாமரத்தூரில் சைல்டுலைன் அமைப்பினர் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
ஜவ்வாதுமலையில் பெற்றோர்களுக்கு பண ஆசை காட்டி 7 குழந்தைகளை வெளியூரில் வேலைக்காக அழைத்துச்சென்ற தம்பதி உள்பட 4 இடைத்தரகர்களை ஜமுனாமரத்தூரில் சைல்டுலைன் அமைப்பினர் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண ஆசை காட்டி...
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். ஜவ்வாதுமலையில் பள்ளி செல்லும் குழந்தைகள், வறுமையின் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளை கண்டறிந்து, அந்த மாணவ-மாணவிகளை இடைத்தரகர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதற்காக சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான இடைத்தரகர்கள் அடிக்கடி ஜவ்வாதுமலைக்கு வருகிறார்கள் எனத் தெரிகிறது. அவர்கள், வறுமையில் வாடும் பெற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு பண ஆசை காட்டி குறிப்பிட்ட தொகையை கொடுத்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பருத்தித்தோட்டம், பனியன் கம்பெனிகளுக்கு குழந்தை தொழிலாளர்களாக அனுப்பி வைப்பதாகத் தெரிகிறது.
புகார்கள்
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், ஏராளமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனர். அந்தக் குழந்தைகளை தொழிலாளர்களாக அந்தக் கும்பல் வெளிமாவட்டங்களுக்கு கடத்தி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜவ்வாதுமலை கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை கணவன், மனைவி உள்பட 4 இடைத்தரகர்கள் கடத்தி செல்வதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளை ஈரோடு அருகில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு கடத்தி செல்வதாகவும் புகார்கள் சென்றன.
மடக்கி பிடித்தனர்
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் நேற்று முன்தினம் மாலை ஜமுனாமரத்தூருக்கு விரைந்தனர். அவர்கள் பஸ் நிலையத்தில் சோதனை நடத்தியபோது 7 குழந்தை தொழிலாளர்களுடன் நின்றிருந்த தம்பதி உள்பட 4 இடைத்தரகர்களை அவர்கள் மடக்கிப்பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை ஜமுனாமரத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரத்தைச் சேர்ந்த ஹரி (வயது 46), அவரின் மனைவி கற்பகம் (32), சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (41), பெரம்பலூர் மாவட்டம் பாதாங்கி கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
மேலும் இவர்கள் குழந்தைகளை கடத்தி சென்று குழந்தை தொழிலாளர்களாக பருத்தித்தோட்டம், பனியன் கம்பெனி ஆகியவற்றில் வேலைக்குச் சேர்க்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட 7 குழந்தைகளை மீட்டு போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story