வீடுபுகுந்து நகை-பணம் திருட்டு


வீடுபுகுந்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 Aug 2021 11:55 PM IST (Updated: 18 Aug 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம், துறையூர் பகுதிகளில் அஞ்சலகம், டீக்கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.

உப்பிலியபுரம், ஆக.19-
உப்பிலியபுரம், துறையூர் பகுதிகளில் அஞ்சலகம், டீக்கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.
எரகுடி அஞ்சல் அலுவலகம்
உப்பிலியபுரம் அருகே உள்ள எரகுடி முசிலி தெருவில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. இங்கு நிலைய அலுவலராக மாராடி கிராமத்தை  சேர்ந்த கவிதா (வயது 46) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அலுவலக பணி முடிந்ததும் அஞ்சலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்றுகாலையில்  வழக்கம்போல் பணிக்கு வந்தபோது, அஞ்சல் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது, ஆவணங்களும், கோப்புகளும் சிதறிக்கிடந்தது.
நகை-பணம் திருட்டு
இதற்கிடையில் அதேதெருவில் உள்ள லாரி டிரைவரான பாலகிருஷ்ணன்(39) என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதியினர் வெளியூர் சென்று இருந்த பாலகிருஷ்ணனை  வரவழைத்தனர். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி, ரூ.7 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், உப்பிலியபுரம் சப்-்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் ஸ்பார்க்  அஞ்சல் அலுவலகத்தில் மோப்பம் பிடித்து பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று பீரோவை மோப்பம் பிடித்துவிட்டு அருகில் உள்ள கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்றது. அங்கிருந்து துறையூர் புளியஞ்சோலை செல்லும் பிரதான சாலைக்கு ஓடிச் சென்று படுத்துக் கொண்டது. இதனையடுத்து இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அஞ்சல் அலுவலகத்தில் பணப்பெட்டியின் பூட்டை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.1 லட்சம் தப்பியது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூரில் கொள்ளை முயற்சி
இதேபோல் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் மணிகண்டன் (38). இவரது கடையிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. மணிகண்டன் கல்லாபெட்டியில் உள்ள பணத்தை எடுத்து சென்றதால், திருட்டு நடைபெறவில்லை. மர்மநபர்கள் கல்லா பெட்டியை மட்டும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story