1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூரில் 1,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடையநல்லூர் மாவடிக்காலில் இருந்து சொக்கம்பட்டி வழியாக புளியங்குடி சென்ற 2 பயணிகள் ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும், ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார், மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, அவர்கள் மாவடிக்கால் ஓடைத்தெருவைச் சேர்ந்த முத்துமாரி மகன் சரவணகுமார் (23), ரெயில்வே பீடர் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சக்திவேல் (22) என்பதும் தெரியவந்தது.
மேலும் ஆட்டோக்களை சோதனை செய்த போது, அதில் 33 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசி புளியங்குடியில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து ரேஷன் அரிசியும், ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story