கிராமப்புறங்களில் போடப்படும் சாலைகள் தரமாக இருக்க வேண்டும் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவுரை
மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போடப்படும் சாலைகள் மக்கள் குறை கூறாத வகையில் தரமாக இருக்க வேண்டும், என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ேபசினார்.
ராணிப்பேட்டை,
மாவட்டத்தில் கிராமப்புறங்களில் போடப்படும் சாலைகள் மக்கள் குறை கூறாத வகையில் தரமாக இருக்க வேண்டும், என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ேபசினார்.
கருத்தரங்கு
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டங்கள், கிராம சாலைகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது, தரமான தார் சாலைகள் அமைப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது
சாலை பணி
திட்டம் 1-ன் படி சாலை வசதி இல்லாத 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு சாலை அமைத்தல் அடிப்படையில் முக்கிய இணைப்பு சாலை அமைத்தல் மற்றும் சாலை மேம்பாடு செய்தல் ஆகும். இப் பணி மத்திய அரசின் 100 சதவீத நிதியில் மேற்கொள்ளப்படுவது. திட்டம் 2-ன் படி குக்கிராமங்களில் இணைப்பு சாலைைய மாவட்டத்தின் முக்கிய சேவை வசதிகொண்ட வளரும் மையங்களை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்த வழிவகை செய்வது. இப்பணி மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் நிதியில் மேற்கொள்ளப்படுவது.
திட்டம் 3-ன் படி குக்கிராமங்களில் இருந்து சந்தை, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவது. இப்பணி மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத நிதியில் மேற்கொள்ளப்படுவது.
தரமாக இருக்க வேண்டும்
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் கீழ் செயல்படும் அனைத்துப் பணிகளும் 3 அடுக்கு தரக்கட்டுப்பாட்டு நடைமுறைக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தரக் கட்டுப்பாட்டில் ஆய்வுக்குப் பின்னரே ஒப்பந்ததாரருக்கு வேலைக்கான பணம் அளிக்கப்படுகிறது. இதனால் தரமான சாலைகள் அமைப்பது உறுதி செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலை இந்த 3 திட்டங்களில் 291 கிலோமீட்டர் நீளத்துக்கு 134 பணிகள் ரூ.76 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. கிராமப்புறங்களில் போடப்படும் சாலைகள் மக்கள் குறை கூறாத வகையில் தரமாக இருக்க வேண்டும். சாலையில் செல்வோர் நல்ல உணர்வுடன் பயணம் செய்யும் வகையில் சாலை அமைந்திருக்க வேண்டும். இதற்கு பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் சாலை பணிகளை கண்காணித்து தரமாக அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கருத்தரங்கில் உதவி பேராசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் தரமான சாலை பணிகள் மற்றும் தரக்கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story