போலீஸ் துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை சகித்து கொள்ள முடியாது; மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
கர்நாடகத்தில் ஒரு சில போலீசாரால், ஒட்டு மொத்த போலீஸ் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதை சகித்து கொள்ள முடியாது என்று மந்திரி அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குற்றங்கள் நடப்பது அதிகரிப்பு
பெங்களூரு நகர போலீசார், குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து ரூ.56 கோடி நகைகள், பொருட்கள், ரூ.32 கோடிக்கு போதைப்பொருட்களை மீட்டுள்ளனர். நாட்டில் கல்வி வளர்ச்சி அதிகரித்து வருவது, பொருளாதாரம் மேம்பட்டு வருவதால் குற்றங்கள் நடைபெறுவது குறையும் என நினைத்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் குற்றங்கள் நடப்பது அதிகரித்து தான் வருகிறது. குற்றங்களில் ஈடுபடுவோர் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.
போலீசார், அதற்கு ஒருபடி மேலே சென்று குற்றங்கள் நடைபெறுவதையும், குற்றங்களில் ஈடுபடுவேரையும் கண்டுபிடிக்க வேண்டும். எங்குமே கிடைக்காத திமிங்கல கழிவை தற்போது விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ திமிங்கல கழிவு ரூ.1 கோடிக்கு விற்பதாக கேள்வி பட்டேன். அந்த திமிங்கல கழிவை விற்க முயன்ற நபர்களையும் துரிதமாக செயல்பட்டு போலீசார் கைது செய்து வருவது பாராட்டத்தக்கது.
போலீசாருக்கு வீடுகள்
எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் போலீஸ் துறைக்கு வருவார்கள் என்று கூறுவார்கள். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் மிகவும் திறமை மற்றும் படிப்பு அறிவை கொண்டவர்களாக இருக்கிறார்கள். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தங்களது பிள்ளைகளுக்கும் சிறப்பான கல்வியையும், சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகவும் வளர்த்து வருகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றும் 99 சதவீதம் பேரில், 49 சதவீதம் பேருக்கு வீட்டுவசதி துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள வீடு கிடைத்திருக்கிறது.
மீதி உள்ள 50 சதவீதம் பேருக்கும் வீட்டு வசதிதுறை மூலமாக வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். போலீஸ் துறையை மேம்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப ரீதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீசார் முன்எச்சரிக்கையாக பணியாற்றினால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதனை உணர்ந்து ஒவ்வொரு போலீசாரும் பணியாற்ற வேண்டும்.
சகித்து கொள்ள முடியாது
கர்நாடக போலீசார் மற்ற மாநில போலீசாருக்கு முன்மாதிரியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் ரவுடிகள், குற்றங்களில் ஈடுபடும் கும்பலுடன் கைகோர்த்து செயல்படுவதை சகித்து கொள்ள முடியாது. ரவுடிகள், குற்றங்களில் ஈடுபடுவோரை முற்றிலும் ஒடுகக வேண்டும். ஒரு சில போலீசார் செய்யும் தவறால் ஒட்டு மொத்த போலீஸ் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதனை சகித்து கொள்ள முடியாது. ரவுடிகள், குற்றங்களில் ஈடுபடுவோருடன் தொடர்பில் இருக்கும் போலீசார் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவுடிகளை அடியோடு ஒழிக்க வேண்டுமே தவிர, அவர்களுடன் கைகோர்ப்பதை ஏற்று கொள்ள முடியாது. நேர்மையாக பணியாற்றும் போலீசாரின் முதுகில் தட்டி, அவர்களுக்கு பின்னால் அரசு நிற்கும். தவறு செய்யும் சில போலீசாரால், ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாரின் பணி பாராட்டத்தக்கது. மக்களுக்காக தொடர்ந்து போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
Related Tags :
Next Story