காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
வேலூர்
காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா 4-வது வார்டில் அசோக்நகர் உள்ளது. அங்கு நாராயணன் மேஸ்திரி தெருவுக்கும் மிஷின்காம்பவுண்ட் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மேற்கொண்டு பணியை தொடராமல் பாதியில் நிற்கிறது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் கோபுரத்தை இயக்க அதற்கான கருவிகள் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
மேலும் அவர்கள் அருகில் உள்ள வள்ளிமலை சாலைக்கு சென்று திடீரென காலை 9.30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். செல்போன் கோபுரம் அமைத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், என்றனர்.
போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் அவர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story