தண்ணீர் கேட்பது போன்று குழந்தையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு புதுக்கோட்டை வாலிபர் கைது
தண்ணீர் கேட்பது போன்று குழந்தையிடம் 2 பவுன் சங்கிலியை பறித்த புதுக்கோட்டை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்
மளிகை கடை
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா மற்றும் அவரது மாமியார் அகிலா ஆகியோர் வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகின்றனர். அகிலா தனது பேரனுடன் கடையில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அகிலாவிடம் தண்ணீர் கேட்டு உள்ளார். இதனால் பேரனை கடையில் விட்டு, விட்டு கடையின் அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர், குழந்தை கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். அப்போது குழந்தை அழத்தொடங்கியது.
சங்கிலி பறிமுதல்
வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்த வந்த அகிலா அங்கிருந்த வாலிபரிடம் குழந்தையை என்ன செய்தாய் அழுகிறது என்று கேட்டு கொண்டே குழந்தையின் கழுத்தை பார்த்தார். அப்போது குழந்தை அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதைபார்த்து அகிலா சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சேலம் பெரிய கிணறு பகுதியில் தங்கி அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்ததும், குழந்்தையிடம் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story