மக்கள் ஆசி யாத்திரையை நடத்தியது ஏன்? சேலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் விளக்கம்
மக்கள் ஆசி யாத்திரையை நடத்தியது ஏன்? என்பது குறித்து சேலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
சேலம்
மக்கள் ஆசி யாத்திரை
மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் சமீபத்தில் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மக்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 16-ந் தேதி கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார்.
திருப்பூர், ஈரோடு, நாமக்கல் வழியாக நேற்று மாலை சேலத்தில் யாத்திரையை நிறைவு செய்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி வழியாக கோட்டை மைதானத்துக்கு வந்த அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோட்டை மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும் போது கூறியதாவது:-
169 இடங்களில்....
பா.ஜனதா கட்சிக்கும், சேலத்துக்கும் மிகப்பெரிய வரலாறு உண்டு. சேலத்தை சேர்ந்த முன்னாள் மாநில தலைவர் எல்.லட்சுமணன், பழனிசாமி, ஆடிட்டர் ரமேஷ் போன்ற தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் மத்திய மந்திரியாக நான் பொறுப்பேற்று மக்கள் ஆசி யாத்திரை நிறைவு செய்வதை பெருமையாக கருதுகிறேன். கடந்த 3 நாட்களில் 169 இடங்களில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி மூலம் மக்களை சந்தித்துள்ளேன்.
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பட்டியலினம், மலைவாழ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாயத்தினரும் அடங்கியவர்களை மத்திய மந்திரிகளாக அமர்த்தி பிரதமர் மோடி அழகு பார்த்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்
நாடாளுமன்றத்தில் புதிய மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்ய விடாமல் தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினார்கள். இதனால் புதிய மந்திரிகள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஆசி பெறுமாறு மோடி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று நான் 3 நாட்கள் மக்கள் ஆசி யாத்திரை மூலம் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டேன்.
தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் வழங்குதல் உள்பட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். அதற்கு ஏற்றவாறு நான் உழைப்பேன். நாம் எல்லோரும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
பா.ஜனதா ஆட்சி அமைக்கும்
முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மத்திய இணை மந்திரியாக்கி சமூக நீதியை நிலை நாட்டியவர் பிரதமர் மோடி. இதே போல் தி.மு.க.வில் செய்ய முடியுமா?. திராவிடம் என்று கூறியவர்கள் தற்போது ஆன்மிகத்தை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு இதுவரை தமிழக நலனுக்காக பல்வேறு திட்டங்களுக்கு ரூ.7 லட்சம் கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. 2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா கட்சி ஆட்சியை அமைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
Related Tags :
Next Story