தனது பெயரிலான போலி முகநூல் கணக்கால் சவுதி அரேபியா சிறையில் சிக்கி தவித்த உடுப்பியை சேர்ந்தவர் நாடு திரும்பினார்


தனது பெயரிலான போலி முகநூல் கணக்கால் சவுதி அரேபியா சிறையில் சிக்கி தவித்த உடுப்பியை சேர்ந்தவர் நாடு திரும்பினார்
x
தினத்தந்தி 19 Aug 2021 2:40 AM IST (Updated: 19 Aug 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

தனது பெயரிலான போலி முகநூல் கணக்கால் சவுதிஅரேபியா சிறையில் சிக்கி தவித்த உடுப்பியை சேர்ந்தவர் நாடு திரும்பினார். அவருக்கு பெங்களூரு விமான நிலையத்தில் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடுப்பி:

உடுப்பியை சேர்ந்தவர்

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் அருகே கோபாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் பங்காரே. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் ஹரீஷ் சவுதிஅரேபியாவில் உள்ள ரியாத்தில் வேலை பார்த்து வந்தார்.

  கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹரீசின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய மர்மநபர்கள், சவுதிஅரேபியா ஆட்சியாளருக்க எதிராக கருத்து பதிவிட்டனர். ஆனால் ஹரீஷ் தான், சவுதிஅரேபியா அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக அந்நாட்டு போலீசர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் தவிப்பு

  ஆனால் தனது கணவர் குற்றமற்றவர் என்றும், அவரது பெயரில் யாரோ மர்மநபர்கள் போலி முகநூல் கணக்கு தொடங்கி சவுதிஅரேபிய அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு இருப்பதாக அவரது மனைவி உடுப்பி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஹரீஷ் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி சவுதி அரேபிய அரசுக்க எதிராக கருத்து பதிவிட்டதாக உடுப்பி மாவட்டம் மூடபித்ரியை சேர்ந்த அப்துல் ஹியூஸ், அப்துல் டுவ்சை கைது செய்தனர்.

  பின்னர் சம்பவம் பற்றி கர்நாடக அரசும், கர்நாடக போலீசாரும் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஹரீஷ் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது. அவர்கள் சவுதிஅரேபிய அரசுக்கும், போலீசாருக்கும் ஹரீஷ் குற்றமற்றவர் என்ற தகவல்களை உரிய ஆதாரங்களுடன் வழங்கி அவரை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு வந்தார்

  இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சவுதிஅரேபிய அரசு ஹரீசை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் நாடு திரும்பினார். டெல்லி வந்தடைந்த அவர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று காலை பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

  அங்கு அவருக்கு அவரது மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய ஹரீசை பார்த்ததும் அவரது மனைவி கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர்விட்டார்.

மத்திய மந்திரிகளுக்கு நன்றி

  இதுகுறித்து ஹரீசின் குடும்பத்தினர் கூறுகையில், சவுதி அரேபிய சிறையில் தவித்த ஹரீஷ் இன்று நாடு திரும்பியுள்ளார். அவரை இந்தியாவுக்கு மீட்டுவர நடவடிக்கை எடுத்த மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ஷோபா, மத்திய, மாநில அரசுகள் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர். ஹரீஷ் தனது சொந்த ஊருக்கு இன்று (வியாழக்கிழமை) காலை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story