புதிய மின் இணைப்புகளை 24 மணி நேரத்தில் வழங்க விரைவு பிரிவுகள்; அதிகாரிகளுக்கு மின்துறை மந்திரி சுனில்குமார் உத்தரவு


புதிய மின் இணைப்புகளை 24 மணி நேரத்தில் வழங்க விரைவு பிரிவுகள்; அதிகாரிகளுக்கு மின்துறை மந்திரி சுனில்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2021 3:15 AM IST (Updated: 19 Aug 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய மின் இணைப்புகளை 24 மணி நேரத்தில் வழங்க விரைவு பிரிவுகள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்துறை மந்திரி சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

மின்துறை திட்டங்கள்

  மின்சாரத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் அத்துறை மந்திரி சுனில்குமார் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மின் வினியோக நிறுவனங்கள் உள்பட அத்துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுனில்குமார் பேசியதாவது:-

  கர்நாடகத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மின்துறை திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் நான் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். டிரான்ஸ்பார்மர்கள் பழுது மற்றும் அவற்றை மாற்றுவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன.

டிரான்ஸ்பார்மர்கள்

  அந்த புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர்களை மாற்றுவதில் காலதாமதம் செய்யக்கூடாது. மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டிய வரைவு திட்ட அறிக்கைகளை தாமதம் செய்யாமல் தயார் செய்து அனுப்ப வேண்டும். கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கும் பணிகளையும் தாமதப்படுத்தக்கூடாது.

  சட்டவிரோத மின் இணைப்பு, மின் கசிவு, மின் இணைப்பு வழங்குவதில் தாமதம், மீட்டர்களை பொருத்துவதில் உண்டாகும் தாமதம் போன்றவற்றால் மின்துறைக்கு ஆகும் நஷ்டத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். விவசாயம், தொழில்துறை மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு தரமான மின்சார வினியோகம் செய்ய வேண்டும்.

விரைவு பிரிவுகள்

  மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் மின்சார "ரீசார்ஜ்" மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள மையங்களை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். புதிய மின் இணைப்புகளை 24 மணி நேரத்தில் வழங்க விரைவு பிரிவுகளை தொடங்க வேண்டும்.
  இவ்வாறு சுனில்குமார் பேசினார்.

Next Story