ரூ.4 கோடி நகைகள், பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு; மந்திரி அரக ஞானேந்திரா வழங்கினார்
பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள், பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வழங்கினார்.
பெங்களூரு:
மந்திரி பார்வையிட்டார்
பெங்களூருவில் 8 மண்டல போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஒரு ஆண்டில் திருட்டு, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2,500-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்திருந்தனர். அவா்களிடம் இருந்து ரூ.56 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், வாகனங்கள், ரூ.32 கோடிக்கு போதைப்பொருட்கள், திமிங்கல வாந்தி (ஆம்பர் கிரீஸ்) உள்ளிட்டவற்றை போலீசார் மீட்டு இருந்தார்கள்.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலந்து கொண்டு, மீட்கப்பட்ட நகைகள், போதைப்பொருட்களை பார்வையிட்டார்.
400 போலீசாருக்கு வெகுமதி
பின்னர் மீட்கப்பட்ட தங்க நகைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை, அவற்றின் உரிமையாளர்களிடம் மந்திரி அரக ஞானேந்திரா வழங்கினார். அதாவது ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள், பிற பொருட்கள், அவற்றின் உரிமையாளா்களான 18 பேருக்கு, மந்திரி வழங்கி இருந்தார். அதே நேரத்தில் குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாரையும், மந்திரி அரக ஞானேந்திரா பாராட்டினார். அந்த போலீசாருக்கு, வெகுமதியையும் அவர் வழங்கினார்.
அதன்படி, 400 போலீசாருக்கு ஒட்டு மொத்தமாக ரூ.18 லட்சம் வெகுமதியை மந்திரி அரக ஞானேந்திரா வழங்கினார். இவற்றில் பெங்களூரு சிக்பேட்டையில் நடந்த முன்னாள் கவுன்சிலர் ரேகா கொலையில் தொடர்புடைய நபர்களை 24 மணிநேரத்தில் சுட்டுப்பிடித்திருந்த சிக்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் ரவி தலைமையிலான போலீசாருக்கு ரூ.1¼ லட்சம் வெகுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த் நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனா் கமல்பந்த், கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
Related Tags :
Next Story