வரும் நாட்களில் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்பிக்கை


வரும் நாட்களில் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்பிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2021 3:41 AM IST (Updated: 19 Aug 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இனி குறுக்கீடு நடப்பது தவிர்க்கப்படும் என்றும், வரும் நாட்களில் நிலைமை சீராகி நாடாளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெறும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

 பெங்களூரு:
  
வெங்கையா நாயுடு சுற்றுப்பயணம்

  இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வாரம் சுற்றுப்பயணமாக கடந்த திங்கட்கிழமை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

  இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ராமையா நிறுவனங்களின் குழும தலைவருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, அந்த நிறுவனங்களின் குழும தலைவர் ஜெயராமுக்கு கர்நாடக தொழில் வர்த்தக சபையின் விஸ்வேசுவரய்யா நினைவு விருது வழங்கி கவுரவித்தார்.

வருத்தப்பட்டேன்

  பின்னர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
  சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஏராளமான இளைஞர்கள் எனக்கு போன் செய்து, நீங்கள் ஏன் கண்ணீர் விட்டீர்கள், நீங்கள் துணை ஜனாதிபதி இதற்கு எல்லாம் வருத்தப்படலாமா என்று கேள்வி கேட்டனர்.

  அதற்கு நான், சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் இந்திய நாடாளுமன்றம் மிகுந்த கீழ் நிலைக்கு சென்றதை கண்டு நான் வருத்தப்பட்டேன் என்று சொன்னேன்.

விவாதத்திற்கு திரும்ப வேண்டும்

  கடந்த காலங்களில் கர்நாடகம் உள்பட பல்வேறு மாநில சட்டசபைகளிலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்றம், சட்டசபையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நற்குணம், திறன், நடந்து கொள்ளும் விதத்தால் நாடாளுமன்றதத்தின் நன்மதிப்பை அதிகரிக்க வேண்டும்.

  மக்கள் பிரதிநிதிகள் தான் மக்களுக்கு முன் உதாரணமாக திகழக்கூடியவர்கள். நீங்களே இவ்வாறு நடந்து கொண்டால், மக்கள் மற்றும் இளைஞர்கள் எந்த மாதிரியான உத்வேகத்தை உங்களிடம் இருந்து பெறுவார்கள்?. எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் விவாதம் நடத்துவது, முடிவு எடுக்க தான் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளன. சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் விவாதத்திற்கு திரும்ப வேண்டும்.

குறுக்கீடு தவிர்க்கப்படும்

  மாநிலங்களவையில் ரகளையில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் பயப்படவில்லை. என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். நாடாளுமன்ற கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள் வருத்தம் அடைவார்கள். மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரும் நாட்களில் நிலைமை சீராகி சாதகமான சூழல் உருவாகி நாடாளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் விவாதம், முடிவுகள் எடுக்கப்படுவதன் தரம் உயரும் என்று நம்புகிறேன். நாடாளுமன்ற கூட்டங்களில் இனி குறுக்கீடு நடப்பது தவிர்க்கப்படும்.

  ஜனநாயகத்தில் போராட்டம், மாற்று கருத்துகள் அதாவது ஏற்பது, நிராகரிப்பது போன்றவை இருப்பது சரியானது தான். ஆனால் ஒருவரை உடல் ரீதியாக நிர்ப்பந்திக்க முடியாது. ஏனென்றால் ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. எதுவாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்றவர்களை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்துகிறவர்கள், குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டியது அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தற்சார்பு இந்தியா

  கர்நாடகத்தை சேர்ந்த விஸ்வேசுவரய்யா மிக சிறந்த என்ஜினீயர். அவர் இந்தியாவின் பெருமை மிகு மகன்களில் ஒருவர். மைசூருவின் நவீன தந்தை. பாரத ரத்னா விருது பெற்ற அவர், மிக சிறந்த புகழ் பெற்ற சிவில் என்ஜினீயர். சீர்திருத்தம், செயல்பாடு, வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக இளம் சமுதாயத்தினர், புதிய ஆலோசனைகள், சிந்தனைகளுடன் முன்வந்து சாதிக்க வேண்டும்.

  வறுமையை ஒழிக்கவும், படிப்பறிவின்மைக்கு முடிவு கட்டவும், மண்டல-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் இளைஞர்கள் பாடுபட வேண்டும். அத்துடன் நமது நாட்டை வலிமையானதாகவும், நிலையானதாகவும் மாற்ற வேண்டும். தற்சார்பு இந்தியாவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அது தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். அவசரத்தின் நிலை உணர்ந்து நமது ஆதாரங்களை மறுசுழற்சி செய்ய வேண்டும். வளர்ச்சிக்கு வேகம் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.

ராம ராஜ்ஜியம்

  செல்வங்களை உருவாக்குவது மட்டுமின்றி, மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ராம ராஜ்ஜியத்தை உருவாக்க அனைத்து வளங்களுடன் இந்தியா மேலும் வளர முடியும். ராம ராஜ்ஜியத்தில் வறுமை, அராஜகம், பாகுபாடு போன்றவை இருக்காது.
  இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

  இந்த விழாவில் கவர்னர் தாவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story