இலங்கை அகதிகளுக்கு தலா 300 சதுரஅடியில் வீடு


இலங்கை அகதிகளுக்கு தலா 300 சதுரஅடியில் வீடு
x
தினத்தந்தி 19 Aug 2021 6:49 AM IST (Updated: 19 Aug 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு தலா 300 சதுர அடிபரப்பளவில் வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கோவை

கோவை மாவட்டத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு தலா 300 சதுர அடிபரப்பளவில் வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். 

2,945 இலங்கை அகதிகள்

கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டியில் 868 பேர், மேட்டுப் பாளையம் வேடர்காலனியில் 725, கோட்டூர் 587, ஆழியார் 765 பேர் என்று மொத்தம் 4 இடங்களில் 1,016 குடும்பத்தை சேர்ந்த 2,945 இலங்கை அகதிகள் உள்ளனர். 

இவர்களில் குடும்ப தலைவன் அல்லது தலைவிக்கு மாதம் ரூ.1000, அடுத்த நபருக்கு ரூ.750, 12 வயதுக்கு கீழான சிறுவர் அல்லது சிறுமிக்கு ரூ.400 என்று மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அகதிகள் மறுவாழ்வு அதிகாரி மகேஷ் கூறியதாவது:-

300 சதுர அடியில் வீடு

அகதிகள் மறுவாழ்வுத்துறை சார்பில் கடந்த வாரம், இலங்கை அகதிகள் குடியிருப்பு ஆய்வு செய்யப்பட்டது. நீண்டநாட்களுக்கு முன்பு 100 சதுர அடியில் கட்டப்பட்ட சிறிய அறை வீடுகள் சிதிலம் அடைந்து இருப்பதாகவும் தங்களுக்கு மாற்று வீடு கட்டித்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். 

இதன் அடிப்படையில் 300 சதுர அடிபரப்பளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியிலேயே தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள் 

இலங்கை அகதிகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி கொடுக்கப் படுகிறது. கூடுதலாக அரிசி தேவைப்படுபவர்களுக்கு பெரியவர்களுக்கு 12 கிலோ வீதமும், சிறியவர்களுக்கு 6 கிலோ வீதமும் கிலோ 57 பைசா விலையில் வழங்கப்படுகிறது. 

கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொகை, தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story