வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், குச்சனூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
பழனிசெட்டிபட்டி ராசிநகரில் ரூ.35 லட்சத்தில் சாலை அமைத்தல், குச்சனூர் சனீஸ்வரர் கோவில் பகுதியில் சுரபி நதியில் பயணிகள் பாதுகாப்பு கம்பிகள் அமைத்தல், பூதிப்புரத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் நடந்து வரும் பூதிப்புரம்-அல்லிநகரம் இணைப்பு சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பூதிப்புரம் அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கழிப்பறை வசதி, குடிநீர், சமையல் கூடம், மேற்கூரை சீரமைத்தல், புதிதாக நடந்து வரும் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள் போன்றவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக பூதிப்புரம், குச்சனூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்து ஆவணங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி உதவி பொறியாளர் ராஜாராம், இளநிலை பொறியாளர் குருசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதாசிவம், சிவக்குமார், சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்த பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டம் பற்றிய கருத்தரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story