பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை 5 ஆண்டுகள் பராமரிக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை 5 ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:-
பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளை 5 ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்க மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
கருத்தரங்கம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ஊரக சாலைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
இணைப்பு சாலை
பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை வசதி இல்லாத 500-க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைத்தல் மற்றும் சாலைகளை மேம்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவதே நோக்கமாகும்.
தரமாக அமைக்க உறுதி
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளை 5 ஆண்டுகள் தொடர்ந்து பராமரிப்புக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த பணிகளை செயல்படுத்திய ஒப்பந்ததாரரே 5 ஆண்டு தொடர் பராமரிப்பையும் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ‘இமார்க்’ எனப்படும் தனிப்பட்ட வலைய இணைய முகப்பின் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தரமான சாலைகள் அமைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story