மரம் வெட்டியதை கண்டித்த வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் மரம் வெட்டியதை கண்டித்த வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரிூ
கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் மரம் வெட்டியதை கண்டித்த வன அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன அதிகாரி ரோந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்சரகம் ஆலப்பட்டி வனவராக இருப்பவர் அருள்நாதன் (வயது 40). சம்பவத்தன்று இவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அகரம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி பெல்லராம்பள்ளி பக்கமுள்ள பாலகுறியை சேர்ந்த செல்வம் (50), சேகர் (40), மணி (54), நாகப்பன் (50) உள்ளிட்டோர் வனப்பகுதியை ஆக்கிரமித்து, அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதை வனவர் அருள்நாதன் கண்டித்து சென்றார்.
கொலை மிரட்டல்
பின்னர் அவர் மீண்டும் ரோந்து சென்ற போது செல்வம் உள்ளிட்ட 4 பேரும் வெட்டப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதை தடுக்க முயன்ற வனவர் அருள்நாதனை, அவர்கள் 4 பேரும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வன அதிகாரி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செல்வம், சேகர், மணி, நாகப்பன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story