பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் பலி


பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் பலி
x
தினத்தந்தி 19 Aug 2021 9:47 PM IST (Updated: 19 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

பில்லூர் அணையில் இருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் பலியானார்கள். சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

மேட்டுப்பாளையம்

பில்லூர் அணையில் இருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் பலியானார்கள். சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். 

பவானி ஆறு 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது. இ்ங்கு மின்சாரம் தயாரிப்பதற்காக தினமும் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும். 

அந்த தண்ணீர் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக செல்லும் பவானி ஆறு மூலம் பவானிசாகர் அணைக்கு சென்றடைகிறது. திடீரென்று ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதால், வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
 
துணி துவைத்தனர் 

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள் அடிக்கடி வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.  மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்த சக்திவேல் (வயது 57). இவருடைய மனைவி சங்குபதி (வயது 50). இவர் தனது மகள் கவிதா (30) பேத்தி சாதனா என்கிற ரித்திகா (13) ஆகியோருடன் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.

பின்னர் அவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளை யம் உப்புப்பள்ளம் பகுதியில் பவானி ஆற்றுக்குள் இறங்கி ஒரு மண் திட்டில் அமர்ந்து துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தனர். 

வெள்ளத்தில் சிக்கினார்கள் 

அப்போது பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பாய்ந்து வந்தது. உடனே அங்கிருந்தவர்கள், வெள்ளம் வருகிறது வெள்ளம் வருகிறது என்று கத்தினார்கள். அது அவர்களுக்கு கேட்க வில்லை. 

இந்த நிலையில் திடீரென்று வெள்ளம் வருவதை பார்த்த சங்குபதி உள்பட 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கரையை நோக்கி ஓடி வர முயற்சி செய்தனர். அதற்குள் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் 3 பேரையும் இழுத்துச்சென்றது. 

2 பேர் பலி; சிறுமி மீட்பு 

உடனே அந்தப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து 3 பேரை யும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறுமி சாதனாவை மட்டும் உயிருடன் மீட்க முடிந்தது. சங்குபதி, கவிதா ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 

இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சங்குபதி, கவிதா ஆகியோர் உடல் மீட்கப்பட்டது. 

போலீசார் விசாரணை 

பின்னர் அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட ரித்திகாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 



Next Story