நாகை கடைமடை பகுதியில், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் மழை
நாகை கடைமடை பகுதியில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நம்பிக்கை தருகிறது. உரமிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்,
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதை வைத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்வார்கள். விவசாயிகளின் எதிர்பார்ப்பின்படி கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திறக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் பல்வேறு தடைகளை தாண்டி கடைமடை பகுதியான நாகை அருகே உள்ள பாலையூருக்கு வந்தது.
இதையடுத்து கடைமடை விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கினர். நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இலக்கை தாண்டி 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் 21 ஆயிரம் ஏக்கர் நேரடி விதைப்பு மூலமும், 11 ஆயிரத்து 800 ஏக்கர் நடவு மூலமும் சாகுபடி பணிகள் நடைபெற்று உள்ளன. நாகை அருகே செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது குறுவை பயிர்கள் 50 நாட்கள் பயிராக காட்சி அளிக்கிறது.
சமீபத்தில் குறுவை பயிருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நாகை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர்களை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் அமைந்து உள்ளது.
மழையை பயன்படுத்தி பயிர்களை பராமரித்து வரும் விவசாயிகள் தற்போது பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பது, உரம் தெளிப்பது, களை பறிப்பது உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நாகை விவசாயிகள் கூறும்போது:-
8 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தான் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் கிடைத்தது. தொடக்கத்தில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பயிரின் நிலையை எண்ணி கவலைப்பட்டு கொண்டிருந்தோம். ஆனால் நாகையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர்.
Related Tags :
Next Story