வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடலூர்,
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் பாவநாசம் (வயது 63). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தலைமை துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பாவநாசம், என்.எல்.சி.யில் வேலை பார்த்த போது, வடலூர் என்.எல்.சி. ஆபிசர் நகரை சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஜோசப்ராஜ், தான் பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக பாவநாசத்திடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர் தனது மகன் சிவராஜிக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு ஜோசப் ராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.12¼ லட்சம் கொடுத்தால் கனடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
உடனே பாவநாசம் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த 2018-ம் ஆண்டு ஜோசப்ராஜியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், 4 ஆண்டுகள் ஆகியும் பாவநாசத்தின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
மோசடி
இந்த நிலையில் சம்பவத்தன்று பாவநாசம், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு ஜோசப்ராஜியிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ஜோசப்ராஜ், பாவநாசத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது தான் அவருக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜோசப்ராஜ் தன்னிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story