உளுந்தூர்பேட்டை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


உளுந்தூர்பேட்டை அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 19 Aug 2021 11:03 PM IST (Updated: 19 Aug 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை, 

குடும்ப தகராறு

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (வயது 23). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவரும், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் பாலு என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. 
இதனிடையே நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. 
பின்னர் சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி பெரியசாமிக்கும், எடைக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிய பெரியசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாலி கிராமத்துக்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

போலீசார் விசாரணை

இதற்கிடையே அங்கு வந்த போலீசார் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெரியசாமி, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து, ராஜலட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 11 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story