காரையூர் அருகே குறைந்த செலவில் மாசில்லாத இ-பைக்கை உருவாக்கிய விவசாயி பொதுமக்கள் பாராட்டு


காரையூர் அருகே  குறைந்த செலவில் மாசில்லாத இ-பைக்கை உருவாக்கிய விவசாயி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 19 Aug 2021 11:42 PM IST (Updated: 19 Aug 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே குறைந்த செலவில் மாசில்லாத இ-பைக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ள விவசாயியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

காரையூர்:
விவசாயி 
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள இடையாத்தூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). விவசாயி. இவர் ஐ.டி.ஐ. (எலக்ட்ரீசியன்) படித்து முடித்துள்ளார். தற்போது சரவணன் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். 
தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் காலம் என்பதனால் நேரத்தை விரயமாக்காமல் புல்லட் மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மொபட்டில் பொருத்தி மாசில்லாத இ-பைக்கை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக 48 வோல்ட் மின்சக்தி, 750 வாட்ஸ் திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்தி இ-பைக்கை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இ-பைக்கை இயக்குகிறார். இந்த இ-பைக் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும். பெட்ரோல் இல்லாமல் இயக்கப்படுகிறது. பெட்ரோலுக்கு பதில் இ-பைக்கை இயக்க மின் இணைப்பு மூலம் சார்ஜ் ஏற்றி இயக்கப்படுகிறது.
இ-பைக்கை தயாரிக்க ரூ.25 ஆயிரம்
இதுகுறித்து சரவணன் கூறுகையில், ஒரு இ-பைக்கை வாங்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். நான் விவசாய வேலை பார்த்து கொண்டு மீதியுள்ள நாட்களில், சென்னையில் உள்ள பழைய இரும்புக்கடையில் இருந்து ஒவ்வொரு உதிரி பாகங்களை வாங்கி மோட்டார் கன்ட்ரோலர், மீட்டர், ஆக்சிலேட்டர், லைட் ஆகியவைகள் ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கி இ-பைக்கை தயாரித்து இப்போது இயக்குகின்றேன். 
இ-பைக்கை தயாரிக்க மொத்த செலவு ரூ.25 ஆயிரம் மட்டும் தான் செலவானது. தற்போது இந்த மோட்டார் சைக்கிளில் 3 பேர் வரை பயணம் செய்ய முடிகிறது. கடந்த 4 மாதமாக போராடி தற்போது தான் இதில் வெற்றி கண்டுள்ளேன். இதுபோல பெரிய மோட்டார் சைக்கிள், கார் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார். 
பொதுமக்கள் பாராட்டு 
தமிழக அரசு வாகன தொழிற்சாலையிலோ, அரசு வேலையோ அல்லது தனியார் வாகன தொழிற்சாலையிலோ தனக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் அல்லது தனியாக இ-பைக் தயாரிப்பதற்கு காப்புரிமை வழங்க வேண்டும் என்றும் சரவணன் கூறி உள்ளார். 
மேலும் சரவணன் வீட்டில் சோலார் மூலம் மின் சக்தியை வீட்டிற்கு பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் 1,500 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறார். இதனால் ஊரே மின்சாரம் இல்லாவிட்டாலும், இவரது வீட்டில் மட்டும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் விளக்குகள் ஒளிர்கின்றன. இவரது முயற்சியை பார்த்து அப்பகுதி மக்கள் சரவணனை பாராட்டி வருகின்றனர்.

Next Story