பாம்பன் பகுதியில் தடையை மீறி மீன்பிடி படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள்
பாம்பன் பகுதியில் தடையை மீறி மீன்பிடி படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள்
ராமேசுவரம், ஆக.20-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதற்கு காவல்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் மீன்பிடி படகுகளில் பயணம் செய்வது அவ்வப்போது தொடர்கின்றது. இந்தநிலையில் பாம்பன் தெற்கு கடல் பகுதியில் இருந்து நேற்று ஒரு மீன்பிடி நாட்டுப்படகில் 4 பேர் ஆபத்தான முறையில் பாதுகாப்பு கவசம் ஏதும் அணியாமல் தடையை மீறி பயணம் செய்தனர். தெற்கு கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த மீன்பிடி படகு பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வடக்கு கடல் பகுதி வரையிலும் சென்று வந்தது. மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது என காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மீன்பிடி படகில் 4 பேர் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இது போன்று சுற்றுலாப் பயணிகளை தடையை மீறி ஏற்றிச் செல்லும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும், சுற்றுலா பயணிகள் இதுபோன்று படகுகளில் பயணம் செய்வதை தடுப்பதற்கும் கடலோர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story