பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை


பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 20 Aug 2021 12:33 AM IST (Updated: 20 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை

ராமேசுவரம்
பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது.
தூக்குப்பாலத்தில் கோளாறு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடல் நடுேவ அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
இந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையாகிவிட்டது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் வழியாக ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா? என்பதை கண்டறிய சென்னை ஐ.ஐ.டி. மூலம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த ரெயிலானது தூக்குப்பாலம் வழியாக சென்றபோது, தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வு இருப்பது சென்சார் மூலம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ெரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக பாம்பன் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வந்தன. உப்புக்காற்றில் துருப்பிடித்து சேதமான இரும்புத்தகடுகள் முழுமையாக அகற்றப்பட்டு, புதிய இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன.
என்ஜினை இயக்கி சோதனை
பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தூக்குப்பாலம் வழியாக தனியாக என்ஜினை மட்டும் இயக்கி பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டது.
நேற்று மதியம் 12.30-க்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நீடித்தது. தூக்குப்பாலம் வழியாக பலமுறை என்ஜினை இயக்கி ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கோட்ட பொறியாளர் கிரிஷ்குமார் தலைமையில் ரெயில்வே அதிகாரிகள் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
மீண்டும் போக்குவரத்து
இதுபற்றி ெரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போது தனியாக என்ஜினை மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப்பாலத்தில் அதிர்வு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் இன்னும் 2 முறை தூக்குப்பாலம் வழியாக பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால், பாம்பன் ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும்” என்றார்.
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் வர வேண்டிய பெரும்பாலான ெரயில்கள் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் வரையிலும் இயக்கப்பட்டு, மீண்டும் அங்கிருந்து திரும்பிச் செல்வது குறிப்பிடத்தக்கது.

Next Story