காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Aug 2021 1:13 AM IST (Updated: 20 Aug 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டி அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் பிரச்சினை
பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட முடங்கன்விளை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8 மணியளவில் 4, 5-வது வார்டு உறுப்பினர்கள் விந்தியா, மணிகண்டன் தலைமையில் காலி குடங்களுடன் தெரிசனங்கோப்பு-தெள்ளாந்தி ெசல்லும் சாலையில் முடங்கன்விளை சந்திப்பில் திரண்டனர். பின்னர் அவர்கள் சீராக குடிநீர் வழங்கக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து தெள்ளாந்தி சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story