தடுப்பூசி முகாமில் இருந்து ‘கோவிஷீல்டு’ மருந்து குப்பிகளை டிபன் பாக்சில் பதுக்கி எடுத்து சென்ற மருத்துவ ஊழியர்கள்
ஹரிஹரா அருகே தடுப்பூசி முகாமில் இருந்து ‘கோவிஷீல்டு’ மருந்து குப்பிகளை டிபன் பாக்சில் பதுக்கி எடுத்து சென்ற மருத்துவ ஊழியர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
சிக்கமகளூரு:
தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, கர்நாடகம் முழுவதும் கிராமங்கள் தோறும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகாவில் கொக்கனூர் கிராமத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் மக்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மருத்துவ ஊழியர்கள் லட்சுமண், ரூபா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு வந்து இருவரும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். இந்த நிலையில், சிறிது நேரத்தில் இருவரும் தங்களின் டிபன் பாக்ஸ்களை மறைத்து வைத்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
கையும் களவுமாக பிடித்தனர்
இதனை பார்த்து அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து கிராம மக்கள், 2 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிராம மக்கள், அவர்கள் 2 பேரின் டிபன் பாக்ஸ்களையும் கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த 2 டிபன் பாக்ஸ்களிலும், தலா 6 ‘கோவிஷீல்டு’ மருந்து குப்பிகள் இருந்தன.
மருத்துவ ஊழியர்கள் 2 பேரும், 12 ‘கோவிஷீல்டு’ மருந்து குப்பிகளை டிபன் பாக்ஸ்களில் பதுக்கி வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் உடனடியாக உடனடியாக ஹரிஹரா தாலூகா தலைமை டாக்டர் சந்திரசேகருக்கு தகவல் கொடுத்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டாக்டர் சந்திரசேகர் விரைந்து வந்தார். பின்னர் அவர், இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவர்கள் 2 பேரும் மருந்து குப்பிகளை விற்பனை செய்ய எடுத்து சென்றனரா அல்லது உறவினர்களுக்கு செலுத்துவதற்கு எடுந்தார்களா என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ ஊழியர்கள் லட்சுமண், ரூபா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் சந்திரசேகர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story