கள்ளத்தொடர்பில் பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ.1.30 லட்சத்துக்கு விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


கள்ளத்தொடர்பில் பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ.1.30 லட்சத்துக்கு விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2021 1:32 AM IST (Updated: 20 Aug 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கள்ளத்தொடர்பில் பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகி விட்ட தந்தையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

மருத்துவமனை முன்பு தகராறு

  பெங்களூரு வில்சன்கார்டன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பாக ஒரு பெண் உள்பட 3 பேர் சண்டை போட்டு கொண்டிருந்தனர். இதுபற்றி வில்சன்கார்டன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

  அப்போது அவர்கள் ஆடுகோடியை சேர்ந்த தருணம் பானு (வயது 38), நிசாத் கவுசர் (45), எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டை சேர்ந்த சபோத் (51) என்று தெரிந்தது. இவர்களில் தருணம் பானு சமூக சேவகி என்றும் தெரிந்தது. கைதான 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பச்சிளம் குழந்தை விற்பனை

  அதாவது தருணம் பானு வீட்டில் ஷெரீன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் முபாரக் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஷெரீன் கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு வில்சன்கார்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தை என்பதால், அதனை வளர்க்க முபாரக் விரும்பவில்லை. இதுபற்றி தருணம் பானுவுக்கு தெரியவந்துள்ளது.

  உடனே அவர், முபாரக்கிடம் கள்ளத்தொடா்பில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு முபராக்கும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டை சேர்ந்த சபோத்திடம் ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனை செய்ய தருணம் பானு பேசி முடித்திருந்தார். இதற்காக முன்பணமாக ரூ.50 ஆயிரத்தையும் தருணம் பானு பெற்றிருந்தார். குழந்தையை விற்பனை செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் நிசாத் கவுசர் தான் செய்து கொடுத்திருந்தார்.

பணத்தை பங்கீடுவதில் தகராறு

  இதற்கிடையில், ஷெரீனுக்கு தெரியாமல் அந்த குழந்தையை முபாரக் விற்க முயன்றதால், தனக்கு கூடுதல் பணம் வேண்டும் என்று தருணம் பானுவிடம் கூறியுள்ளார். குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தை பங்கிட்டு கொள்வது தொடா்பாக தருணம் பானு, முபாரக், நிநாத் கவுசர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

  பின்னர் சபோத்திடம் குழந்தையை கொடுத்துவிட்டு முபாரக் சென்றுவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் மருத்துவமனை முன்பாக நின்று தருணம் பானு, நிசாத் கவுசர் சண்டை போட்டதால், அவர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

3 பேர் கைது

  இதையடுத்து, தருணம் பானு, நிசாத் கவுசர், குழந்தையை வாங்கிய சபோத் ஆகிய 3 பேரையும் வில்சன் கார்டன் போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து பச்சிளம் குழந்தை, ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

  அந்த குழந்தையை தாய் ஷெரீனிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். கைதான 3 பேர் மீதும் வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட குழந்தையின் தந்தை முபாரக்கை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story