கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை; கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மந்திரி ஈசுவரப்பா அறிவுரை
கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மந்திரி ஈசுவரப்பா அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
அடிப்படை வசதிகள்
கர்நாடக அரசின் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் துமகூரு மாவட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு அந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்களின் கிராமங்களில் தூய்மை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். குப்பைகளை அதாவது திடக்கழிவு மேலாண்மையை சரியான முறையில் மேற்கொள்ள தனி கட்டிடம் கட்ட வேண்டும். கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
கிராமப்புற வேலை உறுதி
கிராமங்களை மேம்படுத்த கிடைத்துள்ள 5 ஆண்டுகள் அதிகார வாய்ப்பை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். நீங்கள் தினமும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் கிராமப்புற வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி அதன் மூலம் அவர்களை பொருளாதார பலமிக்கவர்களாக மாற்ற வேண்டும். இந்த திட்டத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்களை பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனித்தனி கழிவறைகள்
இந்த திட்டத்தில் கர்நாடகத்திற்கு 13 கோடி மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை நாங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டோம். இதை பிரதமர் மோடி பாராட்டினார். குளங்கள், மாட்டு தொழுவங்கள், விவசாய குளங்கள், ஏரிகளில் தூர் வாருவது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் ஏரி-குளங்களை ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
கிராமங்களில் அனைத்து வீடுகளில் தனித்தனி கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. அதனால் திறந்தவெளி கழிவறையை அனுமதிக்கக்கூடாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்களின் வீடுகளில் கழிவறை கட்ட வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈசுவரப்பா பேசினார்.
Related Tags :
Next Story