கார் மெக்கானிக் குத்திக் கொலை
பெங்களூருவில் கார் மெக்கானிக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
மனைவியின் நடத்தையில் சந்தேகம்
பெங்களூரு விஜயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆர்.பி.சி.லே-அவுட்டை சேர்ந்தவர் பாசில் பாஷா (வயது 40). இவர், கார்கள் பழுது பார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். பாசில் பாஷா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
மேலும் தன்னுடைய மனைவிக்கும் தொழிலாளியான அர்ஜப் பாஷா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று பாசில் பாஷா சந்தேகம் அடைந்திருந்தார்.
மெக்கானிக் கொலை
இதற்கிடையில், கடந்த 14-ந் தேதி அர்ஜப் பாஷா ஆர்.பி.சி. லே-அவுட் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாசில் பாஷாவுக்கும், அர்ஜப் பாஷாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே 2 பேரும், ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாசில் பாஷாவை குத்திவிட்டு அர்ஜப் பாஷா ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிய பாசில் பாஷா, விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாசில் பாஷா பரிதாபமாக இறந்து விட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விஜயநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பாசில் பாஷாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தனது மனைவியுடன் அர்ஜப் பாஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு சண்டை போட்ட போது, கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட அர்ஜப் பாஷாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story