நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முற்றுகை- ஆர்ப்பாட்டம்
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சியில் 120 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ரூ.259 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், உயர்த்தப்பட்ட சம்பளமான ரூ.292-ஐ வழங்கவில்லை என்றும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை பணி புறக்கணிப்பு செய்து, பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நகராட்சி ஆணையர் தமயந்தி, துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு புதிய நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கு நகராட்சி ஆணையர் வாகனத்தை முற்றுகையிட்டு நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் அறிவித்தவாறு நாளை(இன்று) ரூ.292 வீதம் கணக்கிட்டு வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
நேற்று முன்தினம் சம்பளம் வழங்கவில்லை என்று கூறி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story