கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய நபர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்


கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய நபர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Aug 2021 2:37 AM IST (Updated: 20 Aug 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய நபர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்
நகைக்கடன் தள்ளுபடி
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 5 பவுன் மற்றும் 5 பவுனுக்கு மேல் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை சேகரித்து உடனே அனுப்ப வேண்டும்.
நகைக்கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்களின் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சரிபார்ப்பு
அதன்படி, சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் பெற்றவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நகைக்கடன் பெற்றதற்கான ஆவணங்களை வந்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
நகைக்கடன் பெற்றவர்கள், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு), பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
அறிவிப்பு வெளியாகும்?
மேலும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையாக கூட்டுறவு வங்கிகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டி நகைக்கடன் பெற்ற நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, ஒருவரின் பெயரில் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story