திருவல்லிக்கேணி பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பெண் போலீஸ் உள்பட 2 பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்துச்சென்று வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
பெண் போலீஸ் கவிதா
சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றுபவர் கவிதா (வயது 31). இவர், சேத்துப்பட்டு பிருந்தாவனம் தெருவில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு கவிதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு 10 மணி அளவில் தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து கவிதா பணிக்கு சென்றார். இருவரும் போலீஸ் சீருடையில் இருந்தனர்.திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் செல்லும்போது, இன்னொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் பெண்போலீஸ் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலிகளை பறித்தனர். தங்க சங்கிலியை பறிக்க விடாமல் கவிதா மோட்டார் சைக்கிளில் சென்றபடியே போராடினார். அந்த போராட்டத்தில் கவிதா கழுத்தில் கிடந்த ஒரு தங்க சங்கிலியின் ஒரு பகுதியை மட்டும் காப்பாற்ற முடிந்தது. தங்க சங்கிலிகளின் இதர பகுதியை கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர். கொள்ளையர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக கவிதா, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அரசு பெண் ஊழியர்
திருவல்லிக்கேணி பல்லவன் சாலையிலும் நேற்று முன்தினம் சரஸ்வதி என்ற அரசு பெண் ஊழியரிடம் இதுபோல் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.இது தொடர்பாகவும் திருவல்லிக்கேணி போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். இந்த 2 சம்பவங்களிலும், ஒரே குற்றவாளிகள் தான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story